Sunday, September 30, 2018

கொங்கண் நிலம்(2)


கொங்கண் நிலம் -2
     முதல் நாள் செய்த பயணத்தால் கடும் அசதிக்குள்ளாகி காலை நெடுநேரம் உறங்கி விட்டோம்.லிங்கராஜாவும்,இளையராஜாவும் மட்டும் கொஞ்சம் சீக்கிரமே எழுந்து காலை நடை சென்று வந்தனர்.
நாங்கள் தங்கியிருந்த விடுதி உரிமையாளர் மூலமாக மூன்று ஸ்கூட்டிகளை இரண்டு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டோம்.கார்களும் வாடகைக்கு கிடைக்கும் என்ற போதிலும் ஸ்கூட்டிகளே மேலதிகமாக உள்ளன.ஸ்கூட்டிகளின் ஒரு நாள் வாடகை 300 ரூபாய்.பெட்ரோல் நிலையங்கள் கோவாவில் மிகவும் குறைவு.ஆனாலும்,பெரும்பாலான மெக்கானிக் ஷாப்களில் பெட்ரோல் கிடைக்கிறது ஆனால் விலை சற்றே அதிகம்.கோல்வா கடலில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக குளித்தோம்.கோல்வா கடற்கரை பழைய கோவாவின(old goa) முக்கியமான கடற்கரையாகும். கடற்கரையை அலைகள் சந்திக்கும் இடத்திற்கு சற்று அருகே  நின்றதால்  எனக்கு மூக்கில் நீரேறி மிகவும் களைத்து விட்டேன்.எங்கள் குழுவில் ஆஜானுபாகுவான தோற்றம் உடையவர் லிங்கராஜா.கடலில் குறிப்பிட்ட தொலைவுக்கு கொஞ்சம் அதிகமாக சென்று அவர் மட்டும் குளித்து கொண்டிருந்தார்.நிறைய விஷயங்களை நுட்பமாக கையாளக் கூடியவர் என்பது முன்பே தெரிந்திருந்தாலும்,பெரிய அலைகளை சரியான அளவில் அவர் குதித்தும்,குனிந்தும் அவர் கையாண்ட விதம் பிரமிப்பூட்டியது.கோல்வாவில் குளித்து முடித்த பிறகு அஞ்சுனா கடற்கரை நோக்கி புறப்பட்டோம் .போகிற வழியில் மஜோதரா கடற்கரையில் கொஞ்ச நேரம் காற்று வாங்கினோம்.மஜோதரா மக்கள்  கூட்டம் அதிகம் இல்லாத தென்னை மரங்கள் நிறைந்த கடற்கரை.பனாஜி அருகில் உள்ள Meeting Point என்ற நெடுஞ்சாலை உணவகத்தில் மதிய உணவாக  பிரியாணி  சாப்பிட்டோம்.
நாங்கள் உணவக உரிமையாளரிடம் சொல்லி தகுந்த அளவு காரமும்,உப்பும் சேர்த்து கொள்ள வேண்டினோம்.பொதுவாக கோவாவில் உணவை ஆர்டர் செய்து விட்டு குறைந்தபட்சம் இருபது நிமிடம் காத்திருக்க சொல்கிறார்கள்.எங்களுக்கு பிரியாணி வந்து சேர 45 நிமிடங்களுக்கு மேலாக ஆனது.சிக்கனை கிரேவியில் நன்கு நனைத்து அதை பிரியாணியில் புதைத்து தருகிறார்கள்.நம்மூர் போல கிரேவி எல்லாம் தனியாக தருவதில்லை.லிங்கராஜா சிக்கனுடன் கலந்திருக்கும் மசாலாவை குழைத்து உண்ண வேண்டுமென எங்களுக்கு சொன்னார்.சமீபத்தில் சாப்பிட்ட சிறந்த பிரியாணிகளில் ஒன்றாக அது இருந்தது.அஞ்சுனா கடற்கரையை  அடைந்தபோது மாலையாகிருந்தது.Bricks and Bamboo என்ற விடுதியை ஆன்லைன் மூலமாக புக் செய்திருந்தோம்.விடுதியை நேரில் சென்று பார்த்த போது கட்டுபாடற்ற வாழ்க்கை நெறியை கொண்டு,எல்லோரையும் நேசிக்கும் தன்மை கொண்ட  ஹிப்பிகளின் நினைவாக உருவாக்கப்பட்ட விடுதி அது.கோவாவில் சிறிது காலம் அவர்கள் தங்கி இருந்திருக்கிறார்கள்.வினோத்ராஜூம்கணேசனும்  விடுதியின் உள்ளே போய் பார்த்து வந்து  இந்த விடுதி நமக்கு உகந்தது அல்ல என்றனர்.வேறு விடுதி தேடி புறப்பட்டோம்.அஞ்சுனா கடற்கரைக்கு அருகில் தோசைக்கல்லை பெயர்பலகையாய் வைத்து 'சாப்பாடு ' என எழுதியிருந்த உணவு விடுதியை பார்த்தோம்.கோவையை சேர்ந்த  சந்திரன் என்பவர்  அந்த உணவு விடுதியை நடத்தி வருகிறார்.எங்களுடைய சோற்று பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டதாக நினைத்து கொண்டோம்.அவரே எங்களுக்கு சிறப்பான விடுதி ஒன்றை மிக்குறைந்த விலையில் ஏற்பாடு செய்து தந்தார்.அதன்பின் அஞ்சுனா கடற்கரைக்கு சென்றோம்.மலையால் சூழப்பட்ட கடற்கரை அது. நீர் அரிப்பதால் கரையான் புற்று போன்று பாறைகள் உருமாறியிருக்கின்றன.குளிப்பதற்கு எற்ற இடமாயில்லாததால் சந்திரனிடம் இரவு உணவை ஆர்டர் செய்து விட்டு அறைக்கு திரும்பினோம்.சாப்பிட்டு விட்டு உறங்கபோகும் போது நள்ளிரவாகியிருந்து.
  
புலி நகக்கொன்றை.
               பி.ஏ.கிருஷ்ணின் புலிநகக்கொன்றை  அசோகமித்திரனின் கதைத்தொகுதியை நூலகத்தில் தேடிக்கொண்ருடிந்தபோது எதேச்சையாக கையில் கிடைத்தது. 

திருநெல்வேலி  தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறை வாழ்வுதான் இந்த நாவல். கடந்தகாலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் மாறி மாறி  இயங்கும் கண்ணோட்டத்தை இணைக்கும் சந்திப்புள்ளியாக பொன்னா பாட்டி. மடத்தில் சமையல்காரராக வேலைபார்க்கும் மகளான பொன்னா,வட்டிக்கு விடும் கிருஷ்ணன் ஐயங்கார் மகன்பெருந்தீனிக்காரனான ராமனை மணக்கிறாள்.

ஆங்கிலேயர் கால திருநெல்வேலி, கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையேயான மோதல்.ஆற்காடுநவாப்பாளையக்காரர்களின் பக்கம் என இரு பக்கமும் இருக்கும் பிராமணர்கள். பாளையங்கோட்டையை
 கைவிட்டு ஒடியது நினைத்து துணுக்குறும் கட்டபொம்மன்.பாளையக்காரர்களுக்கு பண உதவி செய்யும் கிருஷ்ணன் ஐயங்கார் என்று வரலாற்றையும் ,வாழ்வையும் சுவாரசியமாக பிணைத்துள்ளளது இந்த நாவல்.

சுதந்திர போராட்ட காலம் பொன்னாவின் மகன்களான நம்மாழ்வார்,பட்சிராஜன் காலத்தில் நடைபெறுகிறது.நம்மாழ்வார் ஆஷ் சுட்டு கொலைசெய்யபட்ட வழக்கில் தானும் கைதாகி 
தியாகியாக வரலாற்றில் இடம் பெற வேண்டும் என நினைக்கிறார்.ஆனால் கடைசிவரை போலீஸ் அவனை தேடி வரவில்லை.அவனுடைய மனைவி லட்சுமியின் மரணத்திற்கு பிறகு மனம் வெறுத்து துறவியாக  வடக்கு நோக்கி சென்றுவிடுகிறான்.
சுதந்திர போராட்ட காலத்தில் திருநெல்வேலியின் சித்திரத்தை இந்த நாவல் தருகிறது.பெரும் மக்கள் தரப்பு இதில் சம்பந்தப்படாமலே இருக்கிறது.

நம்மாழ்வாரின் மகன் மதுரகவி காந்தியின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவனாக இருக்கிறான்.காந்தி கூட்டத்தில் இவன் தொண்டை மெச்சுகிறார் அதிலிருந்து தீவிரமாக காந்தியை பின்பற்றுகிறான்.மதுரகவியின் மகன் நம்பி கம்யூனிஸ சித்தாந்த ஈடுபாடு கொண்டு ரோஜாவை கலப்புத் திருமணம் செய்கிறான். கல்லூரியில் வேலை பார்க்கும் கண்ணன் ஐயர் பெண்ணான உமாவை காதலிக்கிறான்.கல்லூரியில் நடக்கும் வன்முறையில் கண்ணன் ஈடுபட்டதாக சொல்லி கலெக்டர் அவனை பணி இடைநீக்கம் செய்கிறார்.சில காலம் கழித்து  அவன் ஐ.ஏ.எஸ் பாஸாகி டெல்லி செல்கிறான்.

நம்பி நக்ஸைலட் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு போலிஸ் சித்ரவதைக்கு ஆளாகி மரணிக்கிறான்.சம்பவங்கள் நேர்த்தியாக கோர்க்கப்பட்டுள்ளது .அரச பயங்கரவாதத்தின் கோரமுகம்  நம்பி 
யின் மரணத்தை வைத்து சொல்லப்பட்டுள்ளது. 
இந்தி எதிர்ப்புப் போராட்டம், வ.உ.சி- நம்மாழ்வார் சந்திப்பு என சாதாரண மனிதர்கள் வரலாற்றை சந்திக்கும் இடங்கள் புனைவால் மட்டுமே சொல்லப்பட்டுள்ள இயலும் என நினைக்கிறேன் 

விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பி.ஏ.கிருஷ்ணனிடம் ஜெயமோகன் "நீங்கள் எழுதிய புலி நகக்கொன்றையில் journalistic narrative-ஐத் தான் பயன்படுத்தியிருக்கிறீர்கள் "என்று கேட்டார்.அதை வெகுவாக ஆமோதித்தார் கிருஷ்ணன்.அந்த நடை இந்த நாவலுக்கு எந்த விதத்திலும் தடையாக இல்லை.

ரோஸா டெல்லி வரமறுத்து கண்ணனிடம் பேசும் இடங்களில் பிரச்சார தன்மை மிகுந்துள்ளது என நினைக்கிறேன்.நல்ல வேளை
நான் படித்த பிரதியில் கடைசி நான்கு பக்கங்கள் இல்லை.ஏனெனில் நம்பி பிணமாக கண்டெடுக்கும் இடத்திலேயே 
ரத்தமும் சதையுமாக நகரும் இந்த நாவல் முடிந்துவிடுகிறது.
 








 
 



 







 
 



 





Saturday, May 26, 2018

கொங்கண் நிலம் (1)

திருத்துறைப்பூண்டி முள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில் சாய்ராம் பள்ளியில் பணியாற்றும் /பணியாற்றிய நண்பர்களை சந்தித்த போது,"எதேனும் டூர் போகலாமே' என சிங்காரவேல் கேட்க"கோவா செல்லலாமே"என்ற குரல்கள் எழுந்து ஒருவாறாக முடிவாகியது.(பல்வேறு காரணங்களால்  சிங்காரவேல் வரமுடியமால் போனது தனிக்கதை).நான்,கணேசன்,வினோத்ராஜ் ஆகியோர் திருத்துறைப்பூண்டியில் இருந்து கிளம்பினோம்.இளையராஜாநாகப்பட்டினத்திலிருந்து வந்து இணைந்து கொண்டார்.லிங்கராஜா எங்கள் அனைவருக்கும் திருச்சி செல்ல பயணச்சீட்டு எடுத்து கொண்டு திருவாரூரில் காத்திருந்தார்.வினோத் நீடாமங்கலத்தில் இணைந்து கொண்டார்.இரவு உணவாக கணேசன் இட்லி கொண்டு வந்திருந்தார். திருச்சி ரயில் நிலையத்திலிருந்து  அன்று இரவு  மங்களூருக்கு புறப்பட்டோம்.தூங்கி கண் விழித்த போது பாலக்காட்டில் சென்று கொண்டிருந்தோம்.இரவு மழை பெய்திருந்ததால் தாவரங்கள் சௌந்தர்யத்துடன் மலர்ந்திருந்தன.
தென்னை மரங்களும்,பாக்கு மரங்களும் நிறைந்த இடங்களில் கட்டப்பட்டிருக்கும் வீடுகளும்,மழையில் நனைந்ததால் பளபளக்கும் மரத்தின் பட்டைகளும் இனம்புரியாத தவிப்பை மனதில் உண்டாக்கின.கேரளாவில் எந்த ஒரு மரத்தை வெட்டுவதற்கும் அரசிடம்  முன் அனுமதி வாங்க வேண்டும் என்று வினோத் சொன்னார்.லிங்கராஜாவும்,இளையராஜாவும் சப்பாத்தி செய்து கொண்டு வந்திருந்தனர்.காலை உணவை ரயிலிலேயே முடித்தோம்.மங்களூரிலிருந்து  மார்கோ சென்ற போது இரவாகியிருந்தது.மார்கோ ரயில் நிலையத்திலிருந்து தனியார் பேருந்து மூலம் கோல்வா சென்றோம்.கோவாவில் அரசு பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமைகளில் கிடையாது.மற்ற நாள்களில் எட்டு மணி வரை மட்டுமே இயக்கப்படும்.கார் கட்டணமாக இரண்டு கிலோமீட்டருக்கு 600 வரை வசூலிக்கிறார்கள்.சமூகநீதியை நிலைநாட்டுவதில் பேருந்துகளின் பங்கு முக்கியமானது என்று பத்திரிகையாளர் சமஸ் கூறியது ஏனோ நினைவில் வந்தது. கோல்வாவில் ஆன்லைன் மூலமாக  eco garden என்ற விடுதியை புக் செய்திருந்தோம்.விடுதியின் உரிமையாளர் நாங்கள் சென்றதும் இங்கே தஙகுவதற்கு இடமில்லை.வேண்டுமெனில் வேறொரு விடுதியை ஏற்பாடு செய்கிறேன் என்றார்.முதலில் மறுத்து பின் ஒத்துக்கொண்டு Aguiar hostelலில் தங்கினோம்.இரண்டாம் தரமான விடுதி அது.நான்,வினோத் ராஜ்,கணேசன் மூவரும் அலைந்து திரிந்து இரவு உணவை வாங்கி வந்தோம்.கோவா மக்கள் கொங்கணி பேசுகிறார்கள்.அடிப்படை கல்வியை பெற்றவர்கள் ஆங்கிலம் அறிந்திருக்கின்றனர்.கோவாவின் உணவில் பொதுவாக உப்பும்,காரமும் மிகவும் குறைவாகவே சேர்க்கிறார்கள்.
லிங்கராஜா  வீட்டிலிருந்து கொண்டு வந்த புளிச்சோறை.மதிய உணவாக சாப்பிட்டு இருந்ததால் தப்பி பிழைத்தோம்.